கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் புதிதாகப் பாடசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - பா.உ. சந்திரகுமார்.
கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் புதிதாகப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.கிருஸ்ணசாமி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த எம்.சந்திரகுமார் புதிதாக அமைக்கப்படவுள்ள பாடசாலையை அனைத்து வளங்களுடனும் நிர்மாணிப்பதற்குத் தான் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளையும் கணவர்மாரையும் விடுவிப்பதற்கு உதவுமாறும் அத்துடன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தாம் கைவிட்டுச் சென்ற பொருட்களை மீட்டுத் தருமாறும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்த சமயம் மிகவிரைவில் ஏனைய முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகளை தாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் சுயதொழில் முயற்சி மகளிர் அமைப்புக்களின் ஊடாக உதவித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.