திரும்பிச் செல்லும் நினைவுகள்……(13)
உமா மகேஸ்வரன் கொலை!
இப்னு அசூமத்
பயரங்கரவாதமும், வன்முறைகளும் நாடளாவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுகம். நாட்டில் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் ஆங்காங்கே மனித சடலங்களைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலரது உடல்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டிருந்தன. பாதி எரிந்த சடலங்கள், மின்கம்பங்களில் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்கள், எனத் தனித் தனியாகவும், குவியலாகவும் கொல்லப்பட்ட சடலங்கள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் காணக் கூடியதானதொரு சூழல் உருவாகி இருந்தது.
1989ம் வருடம் ஜூலை மாதம் 16ம் திகதி நேரம் இரவு 7.30 மணியளவில் இருக்கும்
“சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபரது உடல் பாதையில் கிடக்கிறது… ஆர் யாரென்று தெரியாது” என பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“எங்கே?” என தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் அதிகாரி வினவினார்.
“பிரென்க்பர்ட் ப்ளேஸில்” என தெலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் மனித சடலங்கள் காணக் கூடியதாக இருந்த இந்த யுகத்தில் இச்செய்தி பொலிஸாருக்கு மேலுமொரு தகவலாகவே இருந்தது. இருப்பினும் செய்தி கிடைத்தவுடன் செயற்பட்ட பொலிஸார் பம்பலப்பிட்டி ப்ரென்க்பர்ட் ப்ளேஸ் நோக்கிச் சென்றனர்.
இனந்தெரியாத அந்த சடலத்தை அண்மித்த பொலிஸார் சடலத்தின் அருகே ஒரு கையும், குடையொன்றும் இருக்கக் கண்டனர். அதனருகில் இரு அடையாள அட்டைகளும் ஒரு சாரதி அனுமதிப் பத்திரமும் இருந்தன.
‘கதிர்காமர் நல்லையா நாதன்’
‘அப்துல்லாஹ் மொஹமட் நவாஸ்’
என்ற வகையில் இரு அடையாள அட்டைகளிலும் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பெயர்களில் வித்தியாசங்கள் தென்பட்ட போதிலும் இரு அடையாள அட்டைகளிலும் காணப்பட்ட புகைப்படங்களும் இறந்து கிடந்த நபரது முகத்தை ஒத்ததாகவே இருந்தன என்பதை பொலிஸார் உணர்ந்து கொண்டனர்.
எவருக்குமே அடையாளம் தெரியாத இந்த சடலத்தை பொரள்ளை பொலிஸ் நிலைய பிரேத அறையில் வைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே ஜூலை 16ம் திகதி இரவு முதல் தனது கணவரைக் காணவில்லை என அகிலேஸ்வரி கணபதிப்பிள்ளை என்ற பெண் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பொரள்ள பொலிஸ் நிலைய பிரேத அறையில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் வைக்கப்பட்டுள்ளதாக இப்பெண் அறிந்து கொண்டார். உடனடியாக பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இப்பெண் அங்கு வைக்கப்பட்டிருந்த சடலம் தனது கணவருடையது தானென்பதைக் கண்டு கொண்டார்.
இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நபர் கதிர்காமர் நல்லையா நாதன் அல்லது அப்துல்லாஹ் மொஹமட் நவாஸ் என இனங்காணப்பட்டவராயினும் இவரது பிரபலமான பெயர் உமா மகேஸ்வரன் என்பதாகும்.
இவற்றைத் தவிர முகுந்தன், பெரியார், வேலு போன்ற பெயர்களிலும் இவர் அழைக்கப்பட்டவராவார்.
உமா மகேஸ்வரன் இவ்வாறு நடுத்தெருவில் வைத்து கொல்லப்பட்டிருந்தாலும் இதிலிருந்து சில வருடங்களுக்கு முன்னதாக இவர் மிக முக்கிய போராளிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவராவார்.
பாடசாலை மாணவனாக இருந்த போது, ஆரம்பத்தில் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களது தமிழரசுக் கட்சியுடன் இணைந்த அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த உமா மகேஸ்வரன், படசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு நில அளவையாளர் திணைக்களத்தில் நில அளவையாளராகக் கடமையாற்றத் தொடங்கினார்.
இதன் காரணமாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பணி செய்யக் கூடிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால் மிக நன்றாக சிங்கள மொழியைப் பேசக் கூடிய ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.
1972ம் வருடம் மே மாதம் 14ம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தமிழ் காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து தமிழர் கூடடணியை உருவாக்கியதையடுத்து ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டணியின் இளைஞர் அமைப்பின் தலைவராக விளங்கியவர் சந்தரஹாசன்.
சந்திரஹாசன் தந்தை செல்வாவின் புதல்வனாவார். இந்த இளைஞர் அமைப்பின் பால் பெருவாரியாக தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்படலாயினர்.
1976ம் வருடம் சுப்பிரமணியம் என்ற இளைஞர் பிரபாகரனைச் சந்திப்பதற்கான வாய்ப்பினை உமா மகேஸ்வரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
இதன் பின்ர் 1976ம் வருடம் மே மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட பிரபாகரன் 5 பேர் கொண்ட மத்திய செயற்குழு ஒன்றையும் நியமித்துக் கொண்டார்.
இதே வருடத்தில் உமா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார். இதிலிருந்து குறுகிய காலத்திற்குள்ளாக உமா மகேஸ்வரனின் ஆளுமை இந்த அமைப்பில் வலுவாகியிருந்தது.
இதனிடையே 1978ம் வருடம் ஜனவரி மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஐக்கியத் தேசியக் கட்சிக்கு மாறிய எம். கனகரத்தினம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள்பட்டது. இதிலிருந்து அவர் உயிர் தப்பினார். எனினும் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், இச்சம்பவத்துடன் தொடபுடையதாக நான்கு சந்தேக நபர்களின் பெயர்கள் அவர்களது புகைப்படங்களுடன் பொலிஸாரால் தேவை’ என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த நால்வரையும் பிடித்துத் தருவோருக்கு பெறுமதியான பரிசு தருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற இத்துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்பட்டவர்களில் இவருவர் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஆவர்.
கனகரத்தினம் கொலை முயற்சி தொடர்பான பொலிஸ் விசாரணைகள் பொலிஸ் ஆய்வாளர் பஸ்தியாம்பிள்ளையினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. கிடைத்த தகவல் ஒன்றின்படி உமா மகேஸ்வரனைத் தேடிச் சென்ற பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட பொலிஸார் 1978ம் வருடம் ஏப்ரல் மாதம் 7ம் திகதி உமா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதே காலகட்டத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு புலிகள் அமைப்பிற்குக் கிடைத்தது. இப்பயிற்சிக்காக உமா மகேஸ்வரன் உள்ளிட்ட ஒரு குழுவே சென்றிருந்தது. இருப்பினும் தேவையான பயிற்சிகளை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு இவர்களால் இயலாமற் போய்விட்டது. அதே நேரம் இவர்களின் ஊடாக ஆயுதங்கள் சிலவற்றைக் கொண்டு வரும் பிரபாகரனின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
இந்த நிலையில் புலிகள் 1978ம் வருடம் தமது முதலாவது வெளிநாட்டு அலுவலகத்தை லண்டனில் திறந்தனர். இந்த அலுவலகத்தில் இருந்த புலிகள் மூன்றாம் உலக நாடுகளின் பயங்கரவாதிகள் தொடர்பில் உமா மகேஸ்வரனுக்கு அறிவித்திருந்தனர்.
இதன் பிரகாரம் தங்களால் மேற்கொள்ளப்படுகின்ற யுத்த வெற்றிகளின் பொறுப்பை பயங்கரவாத அமைப்புக்கள் ஏற்க வேண்டும் என்றும் அதன் மூலம் தங்களது அமைப்பு அதிக பிரபலம் அடையுமென்றும் கூறப்பட்டது. இதன்படி புலிகள் அமைப்பு இதனை ஏற்றுக் கொண்டு துரையப்பா கொலையில் இருந்து 11 படுகொலைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
இவ்வாறு சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் புலிகள் அமைப்பு மெதுமெதுவாக வளரத் தொடங்கியது. இதனிடையே அமைப்பினுள் பல்வேறு நெருக்கடிகள் தலைதூக்க ஆரம்பித்தன.
இந்த அமைப்பின் தலைமைத்துவம் தொடர்பில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் நிலை இதில் முக்கியமானதாகும்.
இந்நிலையில் உமா மகேஸ்வரனின் தவறுகளை பிரபாகரன் தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் உமா மகேஸ்வரனின் காதல் தொடபு பற்றியத் தகவல்கள் பிரபாகரனுக்குத் தெரிய வந்திருந்தது. அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அமைப்பின் உறுப்பினர்கள் காதல் தொடர்புகளை வைத்துக் கொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன், உமா மகேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.
உமா மகேஸ்வரனுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தவர் ஊர்மிளா கந்தையா என்பவர். இவரும் புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளராக விளங்கிக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கிடையிலான காதல் புலிகள் அமைப்பிற்குள் இணைந்த பிறகு ஏற்பட்டதொன்றல்ல. இவர்கள் இருவரும் தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் பணியாற்றிய போதே இவர்களுக்கிடையில் காதல் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இதனிடையே உமா மகேஸ்வரன் தனது கல்லூரிக் காலத்தில் தெல்லிப்பளை சாத்திரி கணபதிப்பிள்ளையின் மகளைக் காதலித்து வந்திருந்தார். பின்னாளில் உமா மகேஸ்வரனை இவரையே திருமணஞ் செய்தார்.
ஊர்மிளா கொழும்பு, கோட்டை பகுதியில் கண்ணாடி கடையொன்றில் பணிபுரிந்திருந்தார். பணிபுரந்து கொண்டே பாதுகாப்புத் தரப்பினர் தொடர்பான தகவல்களையும் புலிகள் அமைப்பிற்கு வழங்கி வந்திருந்தார்.
இந்தக் காதல் விவகாரம் தொடர்பில் பிரபாகரன் உமா மகேஸ்வரனை நேரடியாகவே குற்றஞ் சாட்டினார். அமைப்பிலிருந்து உடனடியாக விலகும்படியும் கூறினார். உமா மகேஸ்வரன் பிரபாகரனின் இக்கூற்றை நிராகரித்தார்.
காதல் தொடர்பொன்றை முன்வைத்து பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் இவ்வாறு வெளிப்பட்டிருந்த போதும் இதன் பின்னனணியில் மறைமுகமாக ப்லவேறு விடயங்கள் இருந்தன. மாக்ஸீயவாதம் தொடர்பில் அக்கறை கொண்டிருந்த உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பின் கொள்கை மாக்ஸீயவாதமாக இருத்தல் வேண்டுமெனக் கூறி வந்தார். என்றும் பிரபாகரன் இதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட போது ஊர்மிளாவும் சுந்தரம் என்பவரும் அவருடன் வெளியேறினர்.
பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் சாதிப் பிரச்சினை ஒன்றும் நிலவியதாகக் கூறப்படுகிறது. உமா மகேஸ்வரன் பிரபாகரனைவிட உயர் சாதியாவார் என்றும் இதனால் அமைப்பின் தலைமை பொறுப்பு இவருக்கே தரப்பட வேண்டுமென உமா மகேஸ்வரனுடன் நெருங்கியவர்கள் கூறிவந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
1979ம் வருடம் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். அமைப்பிலிருந்து வெளியேறிய போது உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் அமைப்பிலிருந்து ஒருதொகை ஆயுதங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.
பிரபாகரனக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான மோதலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து இருவரையும் சமாதானத்திற்குக் கொண்டு வருவதற்கு பாலசிங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
1979ம் வருடம் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய உமா மகேஸ்வரன் 1980ம் வருடம் தமிழ் ஈழு மக்கள் விடுதலை அமைப்பை தனது தலைமையில் உருவாக்கினார். உமா மகேஸ்வரன் மீதான பிரபாகரனின் சினத்தை இது மென்மேலும் அதிகரிக்கச் செய்தது.
குறிப்பாக புலிகளது சட்ட திட்டங்களின் பிரகாரம் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பை உருவாக்குவது பாரிய குற்றமாகும். இதனால் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஆளுக்காள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அத்துடன் இருவரும் ஆளை, ஆள் கண்ட இடத்தில் கொலை செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனிடையே ஊர்மிளா கந்தையாவின் சடலம் வவுனியாவில் ஒரு காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் பிரபாகரன் ரெலோ அமைப்பின் குட்டிமணி மற்றும் தியாகராஜா ஆகியோருடன் நெருக்கமாக இருந்து செயற்பட்டு வந்தார். எனினும் யாழ் குடாநாட்டின் நிலைமைகள் வர வர மோசமடைந்திருந்த நிலையில் பிரபாகரன் 1981ம் வருடம் ஜூன் மாதம் தமிழ் நாட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் உமா மகேஸ்வரனின் ப்ளொட் அமைப்பின் பலம் அதிகரிக்க ஆரம்பித்தது.
இலங்கை வரலாற்றில் பாரிய வங்கிக் கொள்ளை ஒன்றை நடாத்தியவர்கள் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட ப்ளொட் அமைப்பினரே ஆவர். 1981ம் வருடம் ஒக்டோம்பர் மாதம் 23ம் திகதி நிலாவெளி மக்கள் வங்கிக் கிளையைத் தாக்கி 27 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளயிட்டனர். இதன் போது நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கோப்ரல் விஜயசிறி என்பவர் கொல்லப்பட்டார்.
பிரபாகரன் தமிழ் நாட்டுக்குச சென்றிருந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை இங்கிருந்து சார்ள்ஸ் அன்ரனி எனும் சீலன் மேற்கொண்டு வந்தார்.
தமிழ் அமைப்புக்களிடையே மிகவும் பிரபலமான முதலாவது சகோதரப் படுகொலை இக்கால கட்டத்திலேயே இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் உமா மகேஸ்வரின் நெருங்கிய சகாவான ப்ளொட் அமைப்பின் முக்கியஸ்தர் சுந்தரம் என்பவர்.
புலிகள் அமைப்பிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்ட போது அவருடன் இணைந்து வெளியேறிய சுந்தரம் ‘புதிய பாதை’ இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.
1981ம் வருடம் ஜூலை மாதம் 28ம் திகதி ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைக் கைப்பற்றியதில் இவரின் பங்களிப்போ முக்கியமானது. தமிழர் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் தாக்கியழிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் இதுவாகும்.
சுந்தரம் ‘புதிய பாதை’ பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்தவர். 1982ம் வருடம் ஜனவரி மாதம் 2ம் திகதி யாழ் வெலிங்டன் திரையரங்கிற் முன்பாக இருந்த சித்திரா அச்சகத்திற்கு போய்விட்டு திரும்பிய நிலையில் சுடப்பட்டிருந்தார்.
சுந்தரம் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பை உருவாக்கிக் கொண்டதாலேயே அவர் கொல்லப்பட்டார் எனப் புலிகள் கூறியிருந்தனர்.
எனினும், உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்கும் போது, சுந்திரம் ப்ளொட் அமைப்பின் மிகச் சிற்நத அமைப்பாளராக விளங்கினார். யுத்த செயற்பாடுகள் தொடர்பில் அதீத திறமை வாய்ந்தவர். இந்நிலையில் அவர் உமா மகேஸ்வரனுடன் இணைந்து வளர்ந்து வருவதானது புலிகள் அமைப்பிற்கு பாரிய சவாலாகும். இதனால் சுந்தரத்தைக் கொலை செய்ய சார்ள்ஸ் அன்டனி தீர்மானித்திருந்தார்.
சுந்தரத்தின் மரணம் உமா மகேஸ்வரனுக்கு பாரிய இழப்பாகியது. இரத்திற்கு இரத்தப் பழி எடுக்க வேண்டும் என எண்ணிய உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தேடி தமிழ் நாடு செல்லத் தீர்மானித்தார்.
1982ம் வருடம் மே மாதம் 19ம் திகதி, பிரபாகரனும் ராகவனும் இன்னுமொரு நபரும் சென்னை, பாண்டிபஜார் பகுதியில் உள்ள திரையரங்கொன்றிற்குச் சென்றிருந்தனர். இதனை அறிந்து கொண்ட உமா மகேஸ்வரன் பிரபாகரன் திரையரங்கிலிருந்து வெளியில் வரும் வரைக் காத்திருந்தார். திரைப்படம் முடிந்து பிரபாகரனும் ஏனையோரும் சிரித்தடிப வெளியே வந்தனர்.
திரையரங்கில் இருந்து வெளியில் வருபவர்களிடையே உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் இருவரை நேரடியாகப் பார்த்துக் கொண்டனர். உடனே இருவரும் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கிகளை வெளியே எடுத்தனர்.
அடுத்த விநாடி இருவரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் மக்கள் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனிடையே உமா மகேஸ்வரன்தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார். பொதுமக்கள் பிரபாகரனையும் ராகவனையும் துரத்த ஆரம்பித்தனர். உடனடியாக செயற்பட்ட தமிழகப் பொலிஸார் பிரபாகரனையும் ராகவனையும் மற்றைய நபரையும் மடக்கிப் பிடித்தனர்.
உணவு வாங்கும் நோக்கத்துடன் உமா மகேஸ்வரனும் ஜோதீஸ்வரனும் (கண்ணன்) பாண்டிபஜாருக்கு வந்த வேளை இவர்களைக் கண்ட பிரபாகரனும் ராகவனும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் ஜோதீஸ்வரன் இதல் காயமடைந்து பிரபாகரன், ராகவனுடன் பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டதாகவும் இச்சம்பவம் பற்றி இன்னொரு தகவலும் கூறுகிறது.
இதன் பின்னர் உமா மகேஸ்வரனும் அயரது சகாவும் கைது செய்யப்பட்டார்.
1982ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி மேற்படி அனைவருக்கும் 3000 ரூபா வீதம் பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சிலரது ஆதரவை பிரபாகரன் பெற்றிருந்தார்.
இதன் பின் வந்த காலகட்டத்தில் பிரபாகரன் குறுகிய சாதி வேற்றுமையை உள்ளாந்தமாக்க கொண்ட நிலையில் தமிழ் போராட்ட அமைப்புக்கள் அனைத்தையும் அழிப்பதற்கு முற்பட்டிருந்தார். இதன் பிரகாரம் ப்ளொட் அமைப்பும் அவரது இலக்குக்கு உட்பட்டிருந்தது.
உமா மகேஸ்வரன் 1980களின் முற்பகுதியில் மாலைத்தீவு ஆக்கிரமிப்புக்கு உதவியர் பல படகுகளில் மாலைத்தீவை அடைந்த சுமார் 80 பேர் மாலைத்தீவு தலைநகரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்புத் தலைமையகத்தின் மீது ஜனாதிபதி அலுவலகத்தின் மீதும் ஜனாதிபதி மாளிகையின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த செயற்பாட்டின் பின்னணியில் இருந்த முக்கிய அமைப்பு ப்ளொட் அமைப்பென மாலைத்தீவு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கையூப் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இவ்வாறு பாரிய செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்த உமா மகேஸ்வரன் 1988ம் வருடம் தான் ஜனாநாயக நீரோட்டத்திற்குள் பிரவேசிக்க விருப்பங் கொண்டுள்ளதாக அறிவித்தார். இதன்படி 1988ம் வருடம் ஏப்ரல் மாதம் அப்போதைய அஸ்கிரிய பீடத்தின் தலைவராகவிருந்த பலிபான ஸ்ரீ சந்திரானந்த தேரரைச் சந்தித்த உமா மகேஸ்வரன் நாட்டை இரு துண்டுகளாகப் பிரிப்பதை தான் எதிர்ப்பதாகவும் பிளவுபடாத இலங்கைக்கான தனது புதிய சிந்தார்த்தத்தின பிரகாரம் கட்சியின் கொள்கையையும் மாற்றியமைப்பதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக அன்றி ஆயுதங்களின் மூலம் இனப்பிரச்சினைக்கானத் தீர்வை எட்ட முடியாதென்றும் உமா மகேஸ்வரன் கூறியிருந்தார். மேலும் அவரது அமைப்பின் கொள்கையை மட்டுமன்றி கட்சியின் பெயரையும் மாற்றுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இவ்வாறு உமா மகேஸ்வரனின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் ப்ளொட் அமைப்பினுள் பாரிய குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன. உமா மகேஸ்வரனின் குழுவில் இருந்து விலகி;ச சென்ற ஈஸ்வரன் எனம் உறுப்பினர் உமா மகேஸ்வனைக் கொலை செய்யப் போவதாக எச்சரித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் எண்பதுகளின் இறுதிக் கட்டத்தில் உமா மகேஸ்வரனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பல்வேறு திசைகளிலிருந்தும எழுந்திருந்தன.
இந்த அச்சுறுத்தல்கள் அனைத்துக்கும் தனித்து முகங்கொடுக்க வேண்டிய நிலை உமா மகேஸ்வரனுக்கு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் 1989ம் வருடம் ஜூலை மாதம் 16ம் திகதி இரவு 7.30 மணியளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அப்பாபிள்ளை அமிர்தலி;கத்தின் மரண வீட்டுக்குச் செல்வதற்காக உமா மகேஸ்வரன் தனது வீட்டிலிருந்து வெளியேறினார்.
சில காலங்களுக்கு முன்பதாக போராளிகள் பலர் சுற்றிவர, போராட்ட அமைப்புக்குத் தலைமை வகித்திருந்த உமா மகேஸ்வரன் ஒரு சிறிய குடையையும் சிறிய பை ஒன்றையும் மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்.
புறப்பட்ட அவர் சிறிது தூரமே சென்றிருந்தார். ஐந்து துப்பாக்கிக் குண்டுக்ள அவரது கழுத்துப் பகுதியில் பாய்ந்து அவரது மூச்சை நிறுத்தியிருந்தன.
|