+

சரத் பொன்சேகா இன்று புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மை!

 

ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாகிவிட்டார் என போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரப்போகின்ற தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது ஜனாதிபதி பாரிய வெற்றியை ஈட்டுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக சுயாதீன மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களால் செய்யப்பட்டுவரும் கருத்து கணிப்புக்களில் ஜனாதிபதி முன்னிலையில் இருக்கின்றார். .இரண்டாவது காரணமாக ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிக கூடிய மக்கள் வெள்ளத்தை பாருங்கள். நாளுக்குநாள் மணிக்கு மணி மக்கள் திரண்டுவருகின்றனர். மூன்றாவதாக இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கைப் பிரகடனங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்.

உதாரணமாக எதிரணி வேட்பாளர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்ததும் எமது கொள்கை பிரகடனத்திலும் அதிகரித்த சம்பள உயர்வை அறிவிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

ஆனால் தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் 2500 ரூபாவே வழங்க முடியும் என்றும் அதுவே யதார்த்தமானது என்றும் ஜனாதிபதி கூறிவிட்டார். மறுநாள் தபால் மூல வாக்களிப்பை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறி ஜனாதிபதி தனது சிறந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டினார்.

நான்காவது விடயமாக தொழில்சார் நிபுணர்கள் எமது தூண்டுதல் இல்லாமல் ஜனாதிபதிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஐந்தாவது விடயமாக இரண்டு வேட்பாளர்களினதும் வார்த்தை பிரயோகங்களை பார்க்கவேண்டும்.

எதிரணி வேட்பாளர் தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். கடந்த காலங்களில் ஐந்து ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றன. ஆனால் தற்போது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அதிகாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் ஒருவர் அதிகாரத்தை எடுத்தால் என்ன நடக்கும்?

கடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட தனது கட்சியை மிகவும் ஒழுக்கமான முறையில் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்.

ஆறாவது விடயமாக அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை அவதானிக்கவேண்டும். எமது ஜனாதிபதியிடம் தெளிவான கொள்கைகள் இருக்கின்றன. ஆனால் எதிரணிடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இன்று எதிரணி வேட்பாளர் ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் பொம்மையாக மாறிவிட்டார்.

 

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.