திரும்பிச் செல்லும் நினைவுகள்……(12)
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலை!
இப்னு அசூமத்
இருள் மெல்ல மெல்ல சுற்றுச் சூழலைக் கவ்விக் கொண்டிருந்தது. மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வண்டி கொழும்பு, புள்ளர்ஸ் ஒழுங்கைக்குள் நுழைந்து ஓர் இரு மாடிக் கட்டிடத்தின் முன்பாக நிறுத்தப்பட்டது. அந்த வண்டியில் இருந்து இறங்கிய மூவர் அருகில் இருந்த வீட்டின் நுழைவாயில் அருகில் சென்று நின்றனர்.
நுழைவாயில் அருகில் நிற்கும் இவர்களைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி அவர்கள் அருகில் சென்று அவர்களது அடையாள அட்டைகளைப் பரிசோதித்துப் பார்த்தார். அதன்பின் எம் மூவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் மேல் மாடியிலிருந்த யோகேஸ்வரன்,
“வாருங்கோ… வாருங்கோ…” என அம் மூவரையும் பார்த்துக் கூறினார். இம் மூவரும் மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டருகில் வந்து அவர்களில் ஒருவர் அங்கேயே நின்று கொள்ள, இருவர் மட்டும் மேல் மாடிக்குச் சென்றனர். ஒருவர் அங்கேயே நிற்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி அவரிடம் வந்து,
“பேச்சுவார்த்தைக்குத் தானே நீங்களும் வந்தீர்கள்?... இங்கே நிற்க வேண்டாம்… நீங்களும் மேலே போங்கள்”… எனக் கூறினார்.
“இல்லை… பரவாயில்லை… நான் இங்கேயே நிற்கிறேன்”… என்றார் அந் நபர்.
சுமார் ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்…. இரண்டு பேர் மேல் மாடிக்குச்சென்ற பின்னர் மேல் மாடியில் இருந்து வெளிப்பட்ட யோகேஸ்வரன் கீழ் மாடியை நோக்கியவாறே அங்கிருந்த சேனாதிராஜாவிடம் ஏதோ கூறினார்.
இவ்வாறான சம்பவங்கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அமிர்தலிங்கமும் அவரது மனைவியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழ் செய்தியில் தங்களது அவதானங்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர். இதனிடையேதான் யோகேஸ்வரனால் கூறப்பட்ட செய்தியை சேனாதிராஜா அமிர்தலிங்கத்திடம் தெரிவித்தார்.
உடனே சிவசிதம்பரத்தையும் அழைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் மேல் மாடியை நோக்கிச் சென்றார். மேல் மாடியை அடைந்த அவர் அங்கு வந்திருந்த நபர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குச் சென்று சிரித்த முகத்துடன் அவர்களிடம் சுகம் விசாரித்துக் கொண்டார். சில நிமிடங்கள் கழிந்த நிலையில் குறிக்கப்பட்டிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
மிகவும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் யோகேஸ்வரனின் மனைவி தேநீர் விருந்தொன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இதன் பிரகாரம் வந்திருந்தவர்களுக்கு பிஸ்கற், வாழைப்பழம், தேநீர் வழங்கப்பட்டன. சுவார~;யமாகப் பேசிக் கொண்டே, பலத்த சிரிப்புகளுக்கும் மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே நேரம் 7.10 ஆகி இருந்தது.
வந்திருந்த நபர்களில் ஒருவர் தான் பருகிக் கொண்டிருந்த தேநீர்க் கோப்பையை அருகில் வைத்தவாறே தனது இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை வெளியில் எடுத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் திருமதி அமிர்தலிங்கம் கீழ் மாடியில் இருந்தார். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் லண்டன் சென்ற தனது மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் போத்தல்கள் நொறுங்கும் சத்தங்களும் அவருக்குக் கேட்டன.
இதனைக் கேட்டதும் அவர் உடனடியாக மேல் மாடி நோக்கி ஓடினார். இந்நிலையில் அங்கு ஓடோடி வந்த பாதுகாப்பு அதிகாரி, மேல் மாடிக்குச் செல்ல வேண்டாம் என அவரை சைகைக் காட்டினார். பின்னர் திருமதி அமிர்தலிங்கம் வீட்டின் பின் புறமாக அமைந்திருந்த படிகளில் ஏறி மேல் மாடிக்குச் சென்றார். அங்கு அவர் தன்னால் நம்பவே இயலாதக் காட்சியைக் கண்டார். அமிர்தலிங்கம் அங்கிருந்த பிரம்பு நாற்காலி ஒன்றில் சரிந்த நிலையில் காணப்பட்டார்.
அவரது கழுத்து ஒருபுறம் சரிந்திருந்தது. தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சிவசிதம்பரமும் யோகேஸ்வரனும் அவரருகே விழுந்து கிடந்தனர்.
தலையில் இருந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்ட அமிர்தலிங்கத்தின் அருகில் வந்த அவரது மனைவி,
“கடவுளே… உங்களுக்கு என்ன நடந்தது”… எனக் கேட்டவாறே கதறி அழ ஆரம்பித்தார். அமிர்தலிங்கம் ஒரு வார்த்தைக் கூட கதைக்கவில்லை.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் பயனேதும் இருக்கவில்லை. அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் இந்த உலகை விட்டே சென்றிருந்தனர். சிவசிதம்பரம் பலத்த காயங்களுக்கு உட்பட்டிருந்தார்.
அமிர்தலிங்கம் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் றே;கொண்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற கொலையாளிகள் மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
விசு என்றழைக்கப்பட்ட ராசையா, புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளராக இருந்த அரவிந்த ராஜா மற்றும் அலோசியஸ் ஆகிய மூவரே மேற்படி அமிர்தலிங்கம் கொலைத் தொடர்பில் நேரடி சம்பந்தப்பட்டவர்களாவர்.
1927ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி பிறந்துள்ள அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மெய்கண்ணன் தமிழ் பாடசாலையிலும் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். இதன் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் சட்டக் கல்லூரியிலும் மேலதிகக் கல்வியைக் கற்றவர்.
இக்கால கட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
1949ம் வருடம் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் கட்டளைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக் கொண்டார். அத்துடன் மேற்படி கட்டளைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் காங்கிரஸின் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இதன் பின்னர் 1949ம் வருடம் டிசம்பர் மாதம் 3ம் திகதி நடாத்தப்பட்ட மாநாட்டின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு ஆரம்பம் முதல் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வந்துள்ள பல்கலைக்கழக மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அமிர்தலிங்கம் முன்னிலை வகித்து வந்தார்.
தனது 25வது வயதில் சட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர் தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய பங்களிப்பாளராக மாறினார். இக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் 1952ம் வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டார்.
வட்டுக் கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர், அக்கால கட்டத்தில் கூட்டுறவு அமைப்பினுள் மிக முக்கிய பங்களிப்புக்களை வழங்கி வந்த சுயேட்சை வேட்பாளரான வீ. வீரசிங்கம் என்பவராகும். இத் தேர்தலின் போது வீரசிங்கம் வெற்றி பெற, அமிர்தலிங்கம் தோல்வியைத் தழுவினார். இவர் மட்டுமல்லாது தமிழரசுக் கட்சியின் தலைவரான செல்வாயகமும் இத்தேர்தலில் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் பின்னர் 1956, 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 ஆகிய கால கட்டங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அமிர்தலிங்கம் வட்டுக் கோட்டைத் தொகுதியில் தொடர்ந்து வெற்றியீட்டியுள்ளார். 1965ம் வருடம் இவர் 11,000 மேலதிக வாக்குகளால் தனது தொகுதியில் வெற்றியீட்டினார்.
1958ம் வருடம் நடைபெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலும் 1961ம் வருடம் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் கலந்து கொண்டதன் பயனாக செல்வநாயகம், அமிர்தலிங்கம் உட்பட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே 1965ம் வருடம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கமொன்றை அமைக்கும் அளவிற்கு போதிய ஆசனங்கள் இருக்கவில்லை.
எனவே கூட்டு அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை டட்லி சேனாநாயக்க மேற்கொண்டிருந்தார். இதன் போது, தமிழரசுக் கட்சியும் செல்வநாயகம், டட்லி சேனாநாயக்கவுடன் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவு வழங்க முன்வந்திருந்தது.
1970ம் வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் தோல்வியைத் தழுவினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலாநிதி அருள் தியாகராஜா அத்தொகுதியில் வெற்றியடைந்தார்.
இத்தேர்தலின் போது அமிர்தலிங்கம் மட்டுமல்லாது, யாழ்ப்பாணம் தொகுதியில் ஜி.ஜி. பொன்னம்பலம், நல்லூர்த் தொகுதியில் டொக்டர் நாகநாதன், உடுப்பிட்டித் தொகுதியில் மு. சிவசிதம்பரம், பட்டிருப்புத் தொகுதியில் எஸ்.எம். இராசமாணிக்கம் போன்ற முக்கியத் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டிருந்தனர்.
1972ம் வருடம் மே மாதம் 22ம் திகதி நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலாப்புக்கு எதிராக தமிழரசுக் கட்சி பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இவ்வருடம் மே மாதம் 14ம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் எஸ். தொண்டமான் ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் கூட்டணி எனும் கட்சி உருவாக்கப்பட்டது. பின்னர் இது வட்டுக்கோட்டை மாநாட்டின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது.
இதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு தனித் தமிழீழமாகும் என்ற எண்ணக்கருவை முன்வைத்து 1976.05.14ம் திகதி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக அ.அமிர்தலிங்கம் செயற்பட்டு வந்தார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றி;ல் முக்கியத்துவம் பெற்றிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பின்வருமாறு:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கூடாக, வளவை நதியிலிருந்து சிலாபம் வரைக்கும், தெற்கு, மேற்கு பகுதிகளிலும், நடுப்பக்கத்திலும் சிங்கள மக்களும் வடக்கு, கிழக்கு, வடமேற்கு நிலப்பகுதிகளில் தமிழ் மக்களும் வாழ்ந்து இந்நாட்டின் ஆளுகையைச் சிங்கள நாட்டினமும் தமிழ் நாட்டினமும் தமக்குள் பகிர்ந்து வந்தபடியாலும்,
சிங்கள அரசுகளோடு தொடர்பற்ற வகையில் 1619ம் வருடம் போர்த்துக் கேயரால் தமிழ் அரசு போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டு, அவர்களிடமிருந்து ஒல்லாந்தராலும் பின் ஆங்கிலேயராலும் அதே விதமாக வெற்றி கொள்ளப்பட்ட படியாலும், சிங்கள அரசுகளின் நிலப் பகுதிகளையும், தமிழ் அரசுகளின் நிலப்பகுதிகளையும் வேறு வேறாக ஆட்சி செய்து வந்த ஆங்கில ஏகாதிபத்திய வாதிகள் 1833ம் வருடம் ‘கோல் புறூக்’ ஆணைக்குழுவின் விதப்புரைகட்டு அமைய தம் ஆட்சி வசதி கருதி வலுக்கட்டாயமாக இந்நிலப்பகுதிகளை ஒன்றாக இணைத்த படியாலும்,
ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக விடுதலைக் கிளர்ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து இறுதியில் 1948ம் வருடம் இலங்கை சுதந்திரமடைந்த படியாலும், மேற்கூறப்பட்ட வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் முழுத் தீவின் மீதுமான அரசியல் அதிகாரம் சிங்கள நாட்டினத்தின் கைக்கு மாற்றப்பட்டு, அதனால் தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும்,
சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக:
1. தமிழ் மக்களின் அரைப் பங்கினரின் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்து அதனால் பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும்.
2. திட்டமிட்டு அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், இரகசியமாக ஊக்க விடப்பட்ட சிங்களக் கள்ளக் குடியேற்றங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரித்ததாலும், பண்டைய தமிழ் அரசின் நிலப் பகுதிகளில் சிங்கள மக்களை நுழைத்துத் தமிழரைத் தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும்,
3. இலங்கை முழுவதும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கித் தமிழர் மீதும், தமிழ் மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,
4. குடியரசு அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்,
5. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிலப் பங்கீடு, பொருளாதார வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம வாய்ப்பை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், வளர்ச்சித் திட்டங்களில் தமிழ் நிலங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,
6. இலங்கையில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில், தமிழ் நாட்டுக் கலாசாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாசார இனக் கொலையை நோக்கி ஈழத் தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்,
7. 1956ம் வருடம் கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958ம் வருடம் நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1961ம் வருடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974ம் வருடம் யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர் துறக்கக் காரணமான, காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976ம் வருடம் புத்தளத்திலும் இலங்கையின் வேறு பல பாகங்களிலும் காவல் படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல் போன்றும், தமிழ் பேசும் மக்கள் மீது வகுப்பு வெறிப் பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தும் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்து விட்டும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆண்மையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,
8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும் வருடக் கணக்கில் சிறைச்சாலைகளில் அடைத்து வதைத்தும்
9. எல்லாவற்றுக்கும் மேலாக நெருக்கடி நிலைச் சட்டத்தின் கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி, குடியுரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கும், விகிதாசாரத்துக்கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றத்தை அரசியலமைப்பு யாக்க அவை அமைத்து, முந்தைய அரசியலமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு எஞ்சி இருந்த சிறு பாதுகாப்புகளையும் நீக்கி, அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும், தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்,
பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், பாராளுமன்றத்துக்கு உள்ளும், வெளியும் கிளர்ச்சி செய்தும், தமிழ் மக்கள் தன்மானத்தோடு வாழக் கூடிய ஆகக் குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்கள பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனபடியாலும்,
ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறூபான்மைச் சமூகங்களை நசுக்காதவாறு பாராளுமன்றத்தில் சம பல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு, எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் பாராளுமன்றத்தி;ல் நிறைவேற்றப்படுவதைத் தடைசெய்யும் பொருட்டு சோல்பரி அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 29வது விதியின் அற்பப் பாதுகாப்பும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கப்பட்ட படியாலும், ஐக்கிய இலங்கைக் கூட்டாட்சிக் குடியரசின் ஓர் அங்கமாக ஒரு தன்னாட்சித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதே வேளையில், நாட்டின் ஒற்றுமையைப் பேணும் பொருட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு யாக்க அவைக்கு முன்வைத்த திட்டங்கள் அவற்றின் தகுதி ஆராயப்படாமலே முழுதாக நிராகரிக்கப்பட்ட படியாலும்
வல்வெட்டித்துறையில் 1971ம் வருடம் பெப்ரவரி மாதம் 7ம் திகதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின் படி அரசியலமைப்பு யாக்க அவையின் அடிப்படைத் தீர்மானங்களுக்குக் கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங் கட்சியில் இருப்போர் உட்படத் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராலும், கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் அரசாங்கத்தினாலும் அரசியலமைப்பு யாக்க அவையாலும் நிராகரிக்கப்பட்ட படியாலும்,
1966ம் வருடம் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழிச் சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளையாவது அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்யும் பொருட்டும் மொழி உரிமை, மத உரிமை, அடிப்படை உரிமைகள் பற்றியும் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட மூலத்திற்கான திருத்தங்கள் எல்லாமே தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால், மிகப் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்த படியாலும்
1972ம் வருடம் மே மாதம் 22ம் திகதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழ் கூட்டணி 1972ம் வருடம் ஜூன் மாதம் 25ம் திகதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்;பபித்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ் நாட்டினரின் வேட்கைகளை நிறைவு செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்தும், அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வென்றெடுக்கத் தமிழர் கூட்டணி அரசுக்கு எதிராக அறவழி நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்த படியாலும்,
நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற வகையில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியல் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இந்த இறுதி முயற்சியைப் பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித் தள்ளிய படியாலும், தமது அரசியலமைப்புக்குத் தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலை நாட்டுவதற்கு தேசிய அரசுப் பேரவையில் தமது உறுப்புரிமையைத் துறந்து ஓர் இடைத் தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்தி வைத்துக் காங்கேசன்துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் மக்களாட்சி உரிமையைப் புறக்கணித்த படியாலும், 1972ம் வருடம் பெப்ரவரி மாதம் 6ம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கேசன்துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்து மாத்திரமன்றி, திரு. சா.ஜா.வே. செல்வநாயகம் அவர்கட்கும், அவர் மூலம் தமிழர் கூட்டணிக்கும், சுதந்திர இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலி~த் தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புனரமைப்பு செய்யக் கட்டளையிட்ட படியாலும், 1976ம் வருடம் மே மாதம 14ம் திகதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணியின் முதலாவது மாநில மாநாடு தமது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப் பெற்ற கலாசாரப் பாரம்பரியங்களாலும், ஐரோப்பியப் படையெடுப்பாளரின் ஆயுத பலத்தினால் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு பிரத்தியேகமான பிரதேசத்தில் தனி அரசாங்கச் சுதந்திர வாழ்வு நடாத்திய வரலாற்றாலும், தமது பிரதேசத்தில் ஒரு தனி நாட்டினமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உளவுறுதியாலும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது.
1972ம் வருடக் குடியரசு அமைப்பு தமிழ் மக்களைப் புதிய ஏகாதிபத்திய மேலாட்சியாளர்களான சிங்கள மக்களால் ஆளப்படும் அடிமை நாட்டினமாக மாற்றித் தாம் தவறாக அபகரித்துக் கொண்ட அதிகாரத்தை தமிழ் நாட்டினத்தின் தனிப் பிரதேசம், மொழி, குடியுரிமை, பொருளாதார வாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பறித்துத் தமிழ் மக்கள் ஒரு நாட்டினமென்று கூறுவதற்கான தகுதிகள் அத்தனையையும் அழிக்கின்றனர் என்றும் இம்மாநாடு இத்தால் உலகுக்கு அறிவிக்கின்றது.
எனவே, தமிழ் ஈழம் என்ற தனியரசு அமைப்பதை ஒட்டி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்து தொழில் புரியும் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளரை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம் என்ற முறையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்த மனத் தடைகளைக் கவனத்திற்கு அதேநேரத்தில், இத்தீவில் உள்ள தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற, சோசலி~த் தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புனரமைப்பு செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இம்மாநாடு மேலும் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்துகின்றது.
01. தமிழ் ஈழ அரசு வடக்கு, கிழக்கு மாகாண மக்களைக் கொண்டதாகவும், தமிழ் ஈழக் குடியுரிமையை நாடும் இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும், உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் ஈழ வம்சாவளியைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கும், முழுமையான சமத்துவக் குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
02. தமிழ் ஈழ அரசியல் சாதி அழிக்கப்பட்டு, தீண்டாமை என்ற கொடிய முறையும், பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் நிலையும் வேரோடு களையப்பட்டு எந்த உருவத்திலும் அவற்றைக் கடைப்பிடிப்பது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்.
03. தமிழ் ஈழம் மதச் சார்பற்ற அரசாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு வாழும் மக்கள் கடைப்பிடிக்கும் மதங்கள் எல்லாவற்றிற்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் அளிக்கும்.
04. தமிழ் ஈழத்தின் அரச மொழியாகத் தமிழ் இருக்கும். அதே நேரத்தில் சிங்கள அரசில் வாழக் கூடிய தமிழ் பேசும் சிறுபான்மையோருக்குக் கிடைக்கும் உரிமைகளுக்குச் சமதையாக தமிழ் ஈழத்தில் வாழக் கூடிய சிங்களம் பேசும் சிறுபான்மையோருக்கும் தமிழ் மொழியில் கல்வி கற்கும், அரசுடன் கருமமாற்றும் உரிமை பாதுகாக்கப்படும்.
05. ஒரு சோசலி~ அரசாக இருக்கப் போகும் தமிழ் ஈழத்தில், மனிதன் மனிதனைச் சுரண்டி வாழும் நிலை விலக்கப்பட்டும், உழைப்பின் பெருமை உறுதிப்படுத்தப்பட்டும் சட்டத்தினால் விதிக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டுத் தனியார் துறை இயங்க அனுமதிக்கப்படும் அதே நேரத்தில் உற்பத்திச் சாதனங்களும், அவற்றின் விநியோக வழிகளும், அரசுக் கட்டுப்பாட்டுக்கும், உடைமைக்கும் உட்படுத்தப்பட்டும், சோசலி~த் திட்டமிடுதலின் அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டும், தனி மனிதனோ, தனி ஒரு குடும்பமோ சேர்த்து வைக்கக் கூடிய செல்வத்திற்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டும் இருக்கும்.
தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும், விடுதலையையும் வென்றெடுப்பதற்கான ஒரு செயல்திட்டத்தைத் திருகோணமலையில் ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் முன்வைக்குமாறும், போராட்டத்தை விரைவில் ஆரம்பி;க்குமாறும் இம்மாநாடு தமிழர் கூட்டணி நடவடிக்கைக் குழுவைப் பணிக்கிறது.
மேலும் சுதந்திரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிக்க முன்வருமாறும், இறைமையுள்ள சோசலி~த் தமிழ் ஈழ அரசு என்ற இலக்கை அடையும் வரை தயங்காது உழைக்குமாறும் தமிழ்த் தேசிய இனத்திற்குப் பொதுவாகவும், தமிழ் இளைஞர்களுக்குச் சிறப்பாகவும் இம்மாநாடு அறைகூவல் விடுகின்றது.
இதுதான் வட்டுக் கோட்டைப் பிரகடனமாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் 1977ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ம் திகதி இரவு சுமார் 10.00 மணியளவில் யாழ் மருத்துவமனையில் வைத்துக் காலமானார். இதன் பின்னர் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்டார்.
1977ம் வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தனித் தமிழீழம் பெற்றுக் கொள்வது தொடர்பான கோ~த்தையே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்னெடுத்திருந்தனர். இத்தேர்தலின் போது காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டுருந்த அமிர்தலிங்கம் அதிகளவு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.
இத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்தது. இதனால் 18 தொகுதிகளை வெற்றி கொண்டு 6.4 வீதமான விகிதாசாரத்தைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கையின் எதிர்க்கட்சியாக வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இதன் பிரகாரம் அ.அமிர்தலி;ங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். ஆக, இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் செயற்பட்டு வந்தார்.
அக்காலகட்டத்தில் 5ஃ6 பலத்தினை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்பாக பொறுப்புடன் கூடிய எதிர்க்கட்சித் தலைவரது கடமைகள் யாவும் அமிர்தலிங்கத்தினால் நிiவேற்றப்பட்டன என்பதே அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும்.
சிறிமாவே பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்துச் செய்யும் சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்தன பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதன் போது சிறிமாவோ பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கம் பின்வருமாறு கருத்து கூறி அச் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தார்.
“சிறிமாவே பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏதேனும் அநியாயங்கள் நடந்திருக்கலாம் எனினும் அதனை விட பல மடங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது என்ற போதிலும் இது பதிலுக்கு பதில் எதையேனும் செய்யக் கூடியதோ அல்லது பழிவாங்கக் கூடிய சந்தர்ப்பமோ அல்ல. நீதியானதும் நேர்மையானதுமான முறையில் செயற்பட வேண்டிய சந்தர்ப்பமாகும்” என அமிர்தலிங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு எதிராக அன்று கருத்து தெரிவித்திருந்தார்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவர்,
“இங்கு முன்னர் அதாவது பல வருடங்களுக்கு முன்பதாக புத்தரக்கித்த தேரரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளிக்கப்பட்ட நாள் ஞாபகமா? பிக்குமார்களை தூக்கிலிடுவதற்கு அனுமதிக்க இயலாது என நீங்கள் தானே வாதங்களை முன்வைத்தீர்கள்… அத்தோடு தூக்குமரமும் தடைசெய்யப்பட்டது. இப்போது அதே நீங்கள் சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியல் ரீதியாக தூக்குமரத்திற்கு அனுப்பி கொலை செய்யப் பார்க்கிறீர்கள்… உங்களுக்கு இதற்கெல்லாம் இடமளிப்பதற்கு இந்த அமிர்தலிங்கம் தயாரில்லை” எனக் கூறியிருந்தார்.
அமிர்தலிங்கம் சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தவர். அது போலவே பயம் என்பது அவருக்கு இருந்ததாகவே கூற இயலாது. 1984ம் வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டமொன்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அக்கால கட்டத்தில் ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருந்த தமிழர் தரப்பு இளைஞர்களை ‘பொடியன்’கள் என்றே தமிழ் அரசியல் வாதிகள் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ‘பொடியன்கள்’ சிலர் மேடை மீதேறினர். மேடையில் இருந்த கதிரைகளை தூக்கி எறிந்தனர். கொடிகளைத் தீ மூட்டி எரித்தனர். அச்சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்த ஒலிவாங்கியைப் பறித்த ‘பொடியன்கள்’ அதனை தூக்கி எறிந்தனர். இவ்வாறு பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான மோதல் அன்றைய மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
இதன் போது உடனடி செயலில் இறங்கிய அமிர்தலிங்கம் இரு ‘பொடியன்களை’ப் பிடித்துக் கொண்டார்.
“நாய்களா… உங்களால் மேடையை உடைக்க முடியும்…. இந்த அமிர்தலிங்கத்தை கொலை செய்ய முடியும்… என்றாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் ஜனநாயகத்தையும் அழிக்க முடியாது என அடித் தொண்டையில் கத்தியவாறே இரு ‘பொடியன்களை’யும் மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டு தனது உரையைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு இவர் சென்றிருந்த போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் இவரைத் தாக்கினர். இதன் போது முதலில் அமிர்தலிங்கம் பயணித்த வாகனத்திலிருந்து அவரை வெளியில் இழுத்தெடுத்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் வாகனத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.
அவரை வாகனத்திலிருந்து வெளியில் இழுத்தெடுக்கும் போது அவர் அணிந்திருந்த பணியனின் ஒரு கை கிழிந்து விழுந்தது. கீழே விழுந்த அதனை கையில் எடுத்த அமிர்தலிங்கம் அதனைக் கொண்டு தனது உடலில் வியர்வையைத் துடைத்த படியே, ஆட்காட்டி விரலை ‘பொடியள்’ பக்கமாக நீட்டி “காரையும் நொருக்கித் தள்ளுங்கோ… என்னையும் கொல்லுங்கோ… என்றாலும் உங்களால் ஒருபோதும் ஜனநாயகத்தை கொலை செய்ய முடியாது… எனக் கூறியிருந்தார்.
1981ம் வருடம் அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது. 1981ம் வருடம் ஜனவரி மாதம் 5ம் திகதி ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டே இப்பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது.
அத்துடன் மதுரையில் தமிழர் சகோதரத்துவ அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உலகத் தமிழ் மாநாட்டில்’ அமிர்தலிங்கம் ஆற்றியிருந்த உரையும் இதில் அடக்கப்பட்டிருந்தது.
1983ம் வருடம் அரசியலமைப்பில் 6வது சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அக்கால அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களது சத்தியப் பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற பகி~;கரிப்பில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் இல்லாததன் காரணமாக அந்த சத்தியப் பிரமாணம் இவ்வாறு தயாரிக்கப்பட்டிருந்தது.
“… ஆகிய நான் இலங்கை ஜனநாயக சோசலி~க் குடியரசின் அரசியலாப்பை பாதுகாத்து பின்பற்றுவதாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ இலங்கை குடியரசு பூமிப் பகுதிக்குள் தனிநாடொன்றை உருவாக்க ஆதரவு வழங்குதல், ஒத்துழைப்பு வழங்குதல், நிதி வழங்குதல் அல்லது தூண்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன என்பதை கௌரவத்துடன் தெரிவித்து சத்தியபிரமாணம் மேற்கொள்கிறேன்”…
இந்த சத்தியப் பிரமாணத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது. அத்துடன் பாராளுமன்ற பகி~;கரிப்பில் ஈடுபட்டது. விடுமுறை பெறாது மூன்று மாதங்கள் பாராளுமன்றம் வராததன் காரணமாக இவர்கள் பாராளுமன்ற பதவிகளை இழக்க நேரிட்டது.
இவ்வாறு பாராளுமன்ற பதவியை இழந்த அமிர்தலிங்கம் மீண்டும் 1989ம் வருடம்பெப்ரவரி மாதம் 21ம் திகதி தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதிலிருந்து சுமார் 5 மாதங்கள் கழிந்த நிலையிலேயே தமிழர்களது மகத்துவமான அந்தத் தலைவர் புலிப் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.
1977ல் தனித் தமிழ் ஈழம் தொடர்பிலான கருத்தை முன்வைத்து விட்டு அதன் பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு இணங்கியதால் தமிழர் விடுதலைக் கூட்டணியானது காட்டிக் கொடுக்கும் கட்சி எனப் புலிகளால் குறிப்பிடப்பட்டு வந்தது. இதனால் அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து யாழ் முழுவதிலுமாக பரவியிருந்தது. அத்துடன் அமிர்தலிங்கம் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததால் அதுவே இக்கொலைக்கு காரணமாகியது என அக்கால கட்டத்தில் புலிகளின் பிரதித் தலைவரான மாத்தயா கூறியும் இருந்தார்.
இதன் பிரகாரம் 1989ம் வருடம் ஜூலை மாம் 13ம் திகதி அமிர்தலிங்கமும், வி.யோகேஸ்வரனும் கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளின் மூலம் ஜனநாயகத்தை அல்ல பயங்கரவாதத்தையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற புலிகளது நோக்கம் வெளிப்படையாகவே தெரிய வந்திருந்தது.
அமிர்தலிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் இடையில் இருந்த தொடர்பானது சாதாரணமானதொன்றல்ல. பிரபாகரனால் நம்பிக்கை மிகுந்த தலைவராக மதிக்கப்பட்டவர் அமிர்தலிங்கம். ஆரம்ப காலம் முதலே அமிர்தலிங்கத்தின் நெறிப்படுத்துகையில் தன்னை வளர்த்துக் கொண்டவர். அமிர்தலிங்கத்தின் சொற்படி கேட்டு செயற்பட்டவர்.
தனக்கு எந்தவொரு பிரச்சினை வந்தாலும் உடனே அமிர்தலிங்கத்துடன் கலந்தாலோசிக்கும் வழக்கம் பிரபாகரனிடம் இருந்தது.
ஒருமுறை அடையாறில் இருந்த புலிகளின் அலுவலகம் போய் பிரபாகரனுடன் கதைத்து விட்டுப் புறப்பட்டு வந்து தனது காரில் அமிர்தலிங்கம் ஏறும் போது கார்க் கதவைச் சாத்திவிட்ட பிரபாகரன் “அண்ணை நீங்கள் கவனம். உங்களைக் கொல்ல மற்ற இயக்கத்தவர்கள் முனையலாம்” என்று எச்சரிக்கை செய்தார் என பின்பொரு சந்தர்ப்பத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.
“இந்தியாவின் ஏஜண்டுகளாகவும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்பவர்களாகவும் இருந்ததாலேயே அவர்களைக் கொலை செய்தோம்” என புலிகளின் பிரதித் தலைவர் மாத்தயா 1990, மார்ச் 15ம் திகதி வெளிவந்த ‘லங்கா கார்டியன்’ பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்தார்.
அமிர்தலிங்கம் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் இந்தியாவில் இருந்து அமிர்தலிங்கத்துடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடாத்தவென வந்திருந்த விN~ட இராஜதந்திரிகளை இந்தியத் தூதரகத்தில் சந்தித்திருந்தார். இதன் போது என்ன பேசப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது எனினும் ஏதேனும் ஒரு தீர்வுத் திட்டம் தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தீர்வுத் திட்டம் எதனையும் புலிகள் விரும்புவதில்லை. அத்துடன் அக்காலத்தைய பிரேமதாச அரசு இந்திய எதிர்ப்பை மிகவும் கடுமையானதாக கடைப்பிடித்து வந்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையில்தான் புலிகளால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிர்தலிங்கத்தின் நெறிப்படுத்துகையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டவர் பிரபாகரன். பிரபாகரன் சார்பாக லண்டனில் இயங்கிய ஈழ விடுதலை இயக்கத்துக்கு உதவுமாறு லண்டன் மக்களை வேண்டும் கடிதமொன்றை பிரபாகரனிடம் கொடுத்து அவரை மென்மேலும் ஊக்கப்படுத்தியவர் அமிர்தலிங்கம்.
அவ்வாறே விடுதலைப் புலிகளின் உண்மையான தலைவர் பிரபாகரனே என அமிர்தலிங்கத்திடம் கடிதம் வாங்கி அதனைப் போட்டோ பிரதிகள் எடுத்து உலகம் முழுவதற்கும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.
அப்படிப்பட்ட பிரபாகரன்தான் அதே அமிர்தலிங்கத்தை பின்நாளில் சுட்டுக் கொலை செய்தார்.
|